தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நிலைமை சீரடையும் வரை, பள்ளி, கல்லூரிகளின் நேரடி வகுப்புகளை கைவிட்டு, ஆன்லைன் முறையில் வகுப்புகளை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் தினசரி கொரோனா வைரஸ் பரவல் 51 சதவீத அளவுக்கும், காஞ்சிபுரத்தில் 73 சதவீத அளவுக்கும் அதிகரித்திருப்பது 3-ஆவது அலை பரவலின் விளிம்பில் தமிழ்நாடு இருப்பதையே காட்டுகிறது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இனி வரும் நாட்களில் கொரோனா பரவல் இன்னும் பல மடங்கு அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ள ராமதாஸ், இதை உணர்ந்து கொண்டு, கொரோனா மூன்றாவது அலையைத் தடுக்க வட மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் இரவு நேர ஊரடங்கு, பள்ளிகளுக்கு விடுமுறை போன்ற தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.