ஈரோட்டில் வியாபாரிகள் சங்கம் சார்பில் நிலம் வாங்கியதில் 2 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக, அதிமுக நிர்வாகிகள் உட்பட 11 மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி சந்தையில் 800 வியாபாரிகள் உறுப்பினர்களாகவும் நிர்வாகிகளாகவும் உள்ளனர். கடந்த 2015ஆம் ஆண்டு சங்க உறுப்பினர்களுக்கு வீட்டுமனை வாங்க முடிவு செய்யப்பட்டு, 350 உறுப்பினர்களிடம் தலா 70 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்து, நசியனூர் அருகே 20 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுள்ளது.
அந்த நிலத்தை சங்க நிர்வாகிகள் சிலர் தங்களது பெயரிலும் குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் கிரயம் செய்துகொண்டதாகவும் பலமுறை கேட்டும் பணம் கட்டியவர்களுக்கு நிலம் வழங்கப்படவில்லை என்றும் போலீசில் புகாரளிக்கப்பட்டது.
அதன்படி விசாரணை மேற்கொண்ட போலீசார், வியாபாரிகள் சங்கத் தலைவரான அதிமுகவைச் சேர்ந்த பழனிசாமி உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.