தொலைக்காட்சியில் சீரியல் பார்த்த பெண்களை கட்டிபோட்டு நகை பணத்தை கொள்ளையடித்த சம்பவத்தில் 3 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றவர் போட்ட கொள்ளைத் திட்டம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..
காஞ்சிபுரம் மாருதி நகரில் வசிக்கும் ஆடிட்டர் மேகநாதன் என்பவர் தனது இரு சகோதரர்களுடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார். சம்பவத்தன்று சகோதர்கள் 3 பேரும் வேலைக்கு சென்று விட வீட்டில் இவர்களது மனைவியர் 3 பேரும் தனியாக இருந்துள்ளனர்.
வீட்டில் டிவியில் சீரியல் பார்த்துக் கொண்டே சமையலில் கவனம் செலுத்திய போது திறந்துகிடந்த கதவுவழியாக உள்ளே புகுந்த முகமூடி கொள்ளையர்கள் அவர்களை கட்டிப்போட்டு வாயில் துணையை வைத்து அடைத்ததுடன் இவர்களிடமிருந்து 44 சவரன் நகைகள் மற்றும் 2 லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்றதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்
3 தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தநிலையில் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் வழக்கம் கொண்ட மேகநாதனின் உறவினரான சந்தானகிருஷ்ணன் என்பவர் மது மற்றும் கோழி சண்டைக்கு பணம் செலவு செய்வது போன்ற உல்லாச வாழ்க்கையில் ஈடுபடுவது தெரியவந்தது.
அவரை பிடித்து விசாரித்த போது தனது ஊதாரிதனமான செலவுகளுக்கு பணம் தேவைப்படும் என்பதற்காக சொந்த தாய் மாமன் வீட்டிலேயே , கூட்டாளிகளை ஏவி கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது.
மதிய நேரத்தில் அந்த வீட்டில் உள்ள பெண்கள் சமையல் அறையில் இருந்தாலும் அதிக சத்தத்துடன் டிவி சீரியல் பார்ப்பதில் ஆர்வத்துடன் இருப்பதை கண்டு அதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு இந்த கொள்ளை சம்பவத்துக்கு திட்டம் வகுத்துக் கொடுத்துள்ளார் சந்தான கிருஷ்ணன் என்று காவல்துறையினர் சுட்டிக்காட்டினர்.
மேலும் கொள்ளை நடந்த அன்று அந்த பகுதிக்கு செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை அங்கிருந்து விரட்டுவதில் சந்தான கிருஷ்ணன் குறியாக இருந்ததும் தெரியவந்தது.
சந்தானகிருஷ்ணனையும், அவர் கொடுத்த தகவலின் பேரில் அவருடைய கூட்டாளிகளான கௌதம், சிவகுமார் ஆகியோரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து 44 சவரன் நகை, ஒரு லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 31 கிராம் வெள்ளிப் பொருட்களை பறிமுதல் செய் தனர்.
உல்லாச வாழ்க்கைக்காக உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைத்த சந்தானகிருஷ்ணன் தனது கூட்டாளிகள்உடன் ஜெயிலில் கம்பி எண்ணி வருகிறார்.