கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே லேப் டெக்னீசியன் படிப்பை முடித்து விட்டு மருந்தகம் நடத்தி வந்த நபர் சிகிச்சை அளித்ததில் ஒருவர் உயிரிழந்தார். போலி மருத்துவர் போலீசில் சிக்கியுள்ள நிலையில், இதுபோன்ற நபர்களிடம் கவனமாக இருக்கும்படி சுகாதாரத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே நாச்சிக்குப்பம் கிராமத்தில் “காட் பிளஸ் யூ” என்ற பெயரில் மருந்தகம் நடத்தி வந்தவர் தேவராஜ். தன்னை மருத்துவர் என்று கூறிக் கொண்டு சுற்றுவட்டார கிராம மக்களுக்கு அவர் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தார் என்று கூறப்படுகிறது.
அதே ஊரைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் பெங்களூருவிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். விடுமுறைக்காக சொந்த ஊர் வந்த பிரபாகரனுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. "தேவராஜ் டாக்டரிடம் ஒரு ஊசி போட்டா சரியாகிடும்" என்ற அக்கம்பக்கத்தினரின் பேச்சைக் கேட்டு அவரிடம் சென்றுள்ளார் பிரபாகரன். தேவராஜுவும் ஊசி போட்டு சில மாத்திரைகளைக் கொடுக்க, இரவு அவற்றை சாப்பிட்டுப் படுத்தவருக்கு உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளது.
இதனையடுத்து அவரை வேப்பனஹள்ளியிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அவர் போகும் வழியிலேயே இறந்துவிட்டது பரிசோதனையில் தெரியவந்தது. தேவராஜின் தவறான சிகிச்சையால்தான் பிரபாகரன் உயிரிழந்ததாக போலீசில் புகாரளிக்கவே, அவரை போலீசார் கைது செய்தனர்.
மாவட்ட சுகாதாரத்துறையின் விசாரணையில் தேவராஜ் “ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர்” எனப்படும் லேப் டெக்னீசியன் படிப்பை முடித்துவிட்டு, வேறொருவரின் பெயரில் மருந்தகம் தொடங்கி, தன்னை எம்.பி.பி.எஸ் முடித்த மருத்துவர் போல காட்டிக் கொண்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து போலீசார் கைது செய்த நிலையில், அவரது மருந்தகத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.