தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பணம் கொடுக்காமல் உணவு கேட்ட போதை நபருக்கு உணவக ஊழியர் உணவு தர மறுத்ததால், விறகுக் கட்டையால் அவரைத் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஐந்தாம்கட்டளை கிராமத்தில் இயங்கி வரும் அந்த உணவகத்துக்கு இரவு குடிபோதையில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் என்பவன், ஃப்ரைடு ரைஸ் வேண்டும் என ஆறுமுகம் என்ற ஊழியரிடம் கேட்டுள்ளான்.
அவனிடம் பணம் இல்லாததை அறிந்த ஆறுமுகம், ஃப்ரைடு ரைஸ் தர முடியாது எனக் கூறியிருக்கிறார். சிறிது நேரம் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுவிட்டு அங்கிருந்து சென்ற வினோத்குமார், விறகுக் கட்டை ஒன்றை எடுத்து வந்து யாரும் எதிர்பாராத விதமாக ஆறுமுகத்தின் பின் மண்டையில் பலமாகத் தாக்கிவிட்டு ஓடிவிட்டான்.
காயமடைந்த ஆறுமுகம் சிகிச்சை பெற்று வரும் நிலையில், வினோத்குமாரை போலீசார் கைது செய்தனர்.