கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர் பேட்டை அருகே ரோந்துப் பணியில் இருந்த காவலரை பிளேடால் தாக்கிய மனநலம் பாதிக்கப்பட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
மணலூர்பேட்டை காவல் நிலைய தலைமைக் காவலர் தாமோதரன், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த வடிவேல் என்பவருடன் மேலந்தல் பகுதியில் இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அதிகாலை 4 மணியளவில் சைக்கிளில் மூட்டை முடிச்சுகளுடன் அப்பகுதியில் சுற்றித் திரிந்த மர்ம நபர் ஒருவரைப் பார்த்த இருவரும், அந்த நபரிடம் சென்று விசாரிக்க முயன்றுள்ளனர்.
அப்போது எதிர்பாராத வகையில் அந்த நபர், மறைத்துவைத்திருந்த பிளேடு ஒன்றை எடுத்து, இருவரின் முகம், கை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் தாக்கியுள்ளான். நீண்ட போராட்டத்துக்குப் அவனை மடக்கிப் பிடித்து, சக காவலர்களை வரவழைத்து ஒப்படைத்தனர்.
காயமடைந்த இருவரும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட நபர் சற்றே மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்ததை அடுத்து அவரையும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.