மதுரை - தேனி இடையே ரயில் சேவையை விரைவாகத் தொடங்க வலியுறுத்தி, பெரியகுளம் அருகே ரெயில் வராத தண்டவாளத்தில் தோழர்கள் பாயை விரித்து படுத்து உறங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போடி-மதுரை மீட்டர்கேஜ் ரயில் பாதையை அகலப் பாதையாக மாற்றும் பணி 2011-ல் துவங்கியது. இதற்காக 90 கி.மீ. நீளமுள்ள மீட்டர்கேஜ் தண்டவாளங்கள் பெயர்த்து எடுக்கப்பட்டு, 450 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் பல்வேறு கட்டங்களாக பணிகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது வரை மதுரை - தேனி இடையே அனைத்துப் பணிகளும் முடிவடைந்துள்ளன. பரிசோதனை ஓட்டம் நிறைவு பெற்ற நிலையில் முழுமையாக ரெயில்கள் இயக்கப்படவில்லை
மேலும் மீதமுள்ள 15 கி.மீ. தூர தேனி - போடி நாயக்கனூர் அகல ரயில் பாதை பணிகள் நடைபெற்று வருவதை காரணம் காட்டி ரயில்கள் இயக்கம் தொடங்க தாமதமாகி வருகின்றது.
இந்த நிலையில் மதுரை - தேனி வழித்தடத்தில் ரயில் சேவையை துவங்க வலியுறுத்தி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ரெயில் வராத பெரியகுளம் தண்டவாளத்தில் படுத்துறங்கும் போராட்டம் நடைபெற்றது.
மழை குறைந்து வெயில் கொளுத்தத் துவங்கியுள்ளதால், போராட்டத்துக்கு வந்திருந்த சிலர் தண்டவாள சூட்டைத் தவிர்க்க கையோடு கோரைப் பாய்களையும் கொண்டு வந்திருந்தனர். ஒரு தரப்பு போராட்ட முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருக்க, பாய்களோடு வந்தவர்கள் ஏதோ தெருக்கூத்து பார்க்க வந்தவர்கள் போல தண்டவாளத்துக்கு இடையே அவற்றை விரித்துப் போட்டு ஹாயாக படுத்துக் கொண்டனர்.
ரயில்வே அதிகாரிகளிடம் விசாரித்த போது தேனி - போடி நாயக்கனூர் வரையிலான பணிகள் முழுமை பெற்று விரைவில் மதுரை - தேனி இடையே ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவித்தனர்.