திருச்சி துவாக்குடி சுங்கச்சாவடியில் வாகன சோதனைக்கு நிற்காமல் தடுப்புக் கட்டையை உடைத்தெறிந்து, போலீசாரை கீழே தள்ளிவிட்டுச் சென்ற கார் குறித்து சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
TN 20 EE 4779 என்ற பதிவெண் கொண்ட வெள்ளை நிற ஸ்கார்ப்பியோ காரில் நாகையைச் சேர்ந்த கள்ளச்சாரய வியாபாரி ஒருவர் தப்பியோடுவதாகவும், அவரை பிடிக்க சுங்கச்சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தகவல் வந்துள்ளது.
அதன் அடிப்படையில், திருச்சி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடியிலுள்ள சுங்கச்சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளர் சுரேஷ் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அங்கு வெள்ளை நிற ஸ்கார்ப்பியோ காரை பார்த்ததும் போலீசார் ஒருவர் நிறுத்துமாறு கூறி அதன் அருகே சென்று அந்த கள்ளச்சாராய வியாபாரியை பிடிக்க முயன்றார். அப்போது, வேகமாக சென்ற கார் தடுப்பு கம்பியை உடைத்தெறிந்துவிட்டு, போலீசாரையும் கீழே தள்ளிவிட்டுவிட்டு சென்றது.
அத்தோடு, காரை ஓட்டிச் சென்ற அந்த சாராய வியாபாரி கொன்றுவிடுவேன் என சைகையில் போலீசாரை நோக்கி காட்டிச் சென்றதாக கூறப்படும் நிலையில், அவனை தேடி வருகின்றனர்.