ரயிலில் அடிபட்டு யானைகள் பலியாவதைத் தடுக்க அவை கடக்கும் பகுதிகளிலும், ரயில் எஞ்சின்களிலும் அதிநவீன தெர்மல் ஸ்கேனிங் கேமராக்கள் அமைக்கலாம் என ரயில்வே துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
யானைகள் கொல்லப்படுவதைத் தடுப்பது தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ரயில்வே சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நவீனத் தகவல் தொடர்புக் கருவிகளைப் பயன்படுத்தியதால் 69 சம்பவங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
யானைகள் கடக்கும் பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ள 19 கிலோமீட்டர் தொலைவுக்கு வேகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், யானைகள் கடந்து செல்லத் தண்டவாளங்களுக்கு அடியில் பாதை அமைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
யானைகள் மட்டுமல்லாமல் எந்த விலங்கும் ரயிலில் அடிபட்டுப் பலியாவதை நிரந்தரமாகத் தடுக்க வேண்டும் எனவும், ரயில் தண்டவாளங்களை ஒட்டிச் சூரிய மின்சக்தி வேலிகளை அமைக்கலாம் எனவும் நீதிபதிகள் யோசனை தெரிவித்தனர்.
வனத்துறையுடன் கலந்தாலோசித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 7ஆம் நாளுக்குத் தள்ளி வைத்தனர்.