தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அரசு நிலத்துக்கு பட்டா வழங்கியதாக எழுந்த புகாரில் தங்களது டிஜிட்டல் கையெழுத்தைத் தவறாகப் பயன்படுத்தி நில மோசடி நடந்திருப்பதாக பெண் கோட்டாட்சியர்கள் இருவர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.
2015 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் வடவீரநாயக்கன்பட்டி, தாமரைக்குளம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள அரசு நிலங்களை தனியாருக்கு பட்டா மாறுதல் செய்ததாக 2 தாசில்தார்கள் 2 துணை தாசில்தார்கள் உட்பட 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
தொடர்ந்து அன்றைய காலகட்டத்தில் அங்கு கோட்டாட்சியர்களாகப் பணியாற்றிய ஆனந்தி, ஜெயப்பிரதா ஆகியோரை விசாரிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்திருந்தது.
இந்த நிலையில், தாங்கள் பணிமாறுதல் பெற்று சென்ற பின்னர், தங்களது பாஸ்வேர்டு மற்றும் டிஜிட்டல் கையெழுத்தை முறைகேடாகப் பயன்படுத்தி, ஆவணங்களைத் திருத்தி, நிலங்கள் பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளன என்று ஆனந்தி, ஜெயப்பிரதா ஆகியோர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.