கொடைக்கானல் பாச்சலூரில் 5ஆம் வகுப்பு சிறுமி பள்ளி வளாகத்தில் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில், குற்றவாளியை பிடிக்கக் கோரி தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போரட்டம் நடத்தி வரும் பெற்றோரிடம் கோட்டாட்சியர் தலைமையில் இரண்டாவது நாளாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கடந்த 15ஆம் தேதி சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், இதுவரை சம்பந்தப்பட்டவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
நேற்று காவல்துறையினரும், பள்ளி ஆசிரியர்களும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புமாறு பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்ற நிலையில், இன்று கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.