திருப்பூரில் செல்போன் கடை முன்பு தள்ளுவண்டியில் சாப்பாடு கடை நடத்தும் நபருக்கு ஆதரவாக, செல்போன் கடை உரிமையாளரை மிரட்டிய காவலர், குரல் பதிவுடன் சிசிடிவியில் சிக்கியதால் பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.
திருப்பூர் முத்தணம்பாளையத்தை சேர்ந்தவர் ஜாபர். இவர் திருப்பூர் புஷ்பா ஜங்சன் பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவரது கடை முன்பு இரவு நேர தள்ளுவண்டி உணவகம் ஒன்று செயல்பட்டு வந்தது. இதனால் தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் வாகனத்தை நிறுத்த இயலவில்லை எனக்கூறி தள்ளுவண்டி கடையை அங்கிருந்து நகர்த்தச்சொன்னதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் அந்த தள்ளுவண்டி கடையில் இரவு இங்கு உணவு சாப்பிட வந்த போலீஸ்காரர் ஒருவர் திடீரென ஜாபரின் மொபைல் கடைக்குள் புகுந்து, நீ எப்படி கடை நடத்துகிறாய் ? கடைக்கு யாரும் வராதபடி செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானது
வழக்கமாக சிசிடிவி காட்சிகளில் குரல் பதிவு இருக்காது, ஆனால் ஜாபரின் கடையில் இருந்து வெளியான சிசிடிவி காட்சியில் காவலரின் குரல் பதிவு தெளிவாக இருந்தது. இந்த மிரட்டல் வீடியோ வைரலான நிலையில் வீரபாண்டி காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவலர் அலெக்சாண்டர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுபோன்ற குரலையும் சேர்த்து பதிவு செய்யும் சிசிடிவி காமிராக்களை கடையில் பொருத்துவதன் மூலம் அங்கு நடக்கின்ற வீண் விவாதங்கள், மற்றும் சண்டைகள் தவிர்க்கப்படும் என்று சுட்டிக்காட்டுகின்றனர் காவல்துறையினர்.