"இன்னுயிர் காப்போம்" திட்டத்தின் கீழ் 48 மணி நேரத்தோடு சிகிச்சை முடிந்துவிடாது என்றும், முதலமைச்சரின் காப்பீட்டு திட்டம் மூலம் கட்டணமின்றி சிகிச்சையை தொடரலாம் என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். விலையுயர்ந்த பைக்குகளை, பிள்ளைகளுக்கு வாங்கித்தரும் பெற்றோர், மிகுந்த கவனத்தோடு முடிவெடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இன்னுயிர் காப்போம் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். தமிழக அரசின் "இன்னுயிர் காப்போம்" திட்டத்தின் மூலம் சாலை விபத்தில் படுகாயமடைந்த நபர்களுக்கு, அரசு மருத்துவமனைகளில் மட்டுமின்றி, தனியார் மருத்துவமனைகளில், கட்டணமின்றி சிகிச்சை அளிக்கப்படும். இதன் மூலம் விபத்தினால் பாதிக்கப்பட்ட நபருக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும்.
விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ், 48 மணி நேரத்திற்கு பின்பும் இலவச சிகிச்சையை தொடர முடியும் என்றார். மேலும், சலைகளில் வேகமாக செல்வதை விட, உழைப்பில் வேகத்தைக் காட்ட வேண்டும் என அறிவுறுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஹெல்மெட்டை வண்டிகளில் மாட்டிக் கொண்டு செல்லாமல் தலையில் அணிந்து செல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
விபத்து காரணமாக எந்த உயிரும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில், தமிழக அரசு உறுதியாக உள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார். அத்துடன் விலையுயர்ந்த மோட்டர் சைக்கிள்களை பயன்படுத்துவோர், முறையாகப் பயிற்சிப் பெற்று, கவனமாக கையாள வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.