ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டு செயலிகள் மூலம் 10 கோடி ரூபாய் வரை மோசடி செய்து, அதை கிரிப்டோகரன்சிகளாக வெளிநாட்டு கும்பலுக்கு அனுப்பி மீண்டும் வங்கிக் கணக்குகளுக்கு பரிவர்த்தனை செய்ததாக 5 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
இந்தியாவில் ஓரிரு யூனியன் பிரதேசங்களை தவிர மற்ற மாநிலங்களில் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சூதாட்ட விளையாட்டுகள் இன்றைய டிஜிட்டல் இடத்திற்கு ஏற்றவாறு வேறொரு வடிவில் பொதுமக்களிடம் ஊடுருவி உள்ளது. ஆன்லைன் ரம்மி, போக்கர் உள்ளிட்ட ஏராளமான ஆன்லைன் விளையாட்டுகள் இணையத்தில் பரவிக் கிடக்கின்றது.
ஆன்லைன் ரம்மி விளையாடும்போது முதலில் ஒருசில ஆட்டங்களில் ஆட்டக்காரர்கள் வெற்றி பெறுவர். அதனால் தொடர்ந்து வெற்றி பெறலாம் என்று நம்புபவர்கள், அடுத்தடுத்து பணம் கட்டி விளையாடும்போது, அவர்களுக்குத் தோல்வியே மிஞ்சும்.
அதற்கேற்ற வகையில்தான் ஆன்லைன் சூதாட்டங்களின் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை உணராமல், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களுக்கு அடிமையானவர்கள், மீண்டும் மீண்டும் விளையாடிப் பணத்தை இழப்பாதாக கூறப்படுகிறது. இறுதியில் பலர் தற்கொலை முயற்சிக்கு ஆளாகிறார்கள்.
இத்தகைய ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் தமிழகத்தில் 10 கோடி ரூபாய் அளவில் மோசடி செய்த 5 பேரை கைது செய்ததாக தமிழக சைபர் க்ரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். சசிகுமார், சாய்குமார், ராஜ்குமார், ராஜேஷ்குமார், முகமது ஆசிப் என கைதான 5 பேரும், வெளிநாட்டில் இருந்து இயங்கும் மோசடி கும்பலுக்கு தமிழகத்தில் உள்ள தரகர்களாக செயல்பட்டதாக விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
ஆன்லைன் சூதாட்ட செயலிகளில் விளையாடி பணத்தை தொலைப்பவர்களின் பணம் கைதான இந்த தரகர் கும்பலின் கணக்கிற்கு செல்லும் என கூறப்படுகிறது. இந்த பணத்தை பிட்காயினில் முதலீடு செய்து, வெளிநாட்டு கும்பலுடன் பணத்தை பங்கிட்டுக் கொள்வதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆன்லைன் கேம் செயலியில் கைதான இடைத்தரகர்கள் தங்கள் வங்கிக் கணக்கை இணைத்துக்கொண்டு, ஆன்லைன் விளையாட்டில் இழக்கும் பணத்தை பிட்காயின்களாக மாற்றியதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுவரை தமிழகத்தில் இருந்து ஆன்லைன் சூதாட்டம் மூலம் 10 கோடி ரூபாயை கிரிப்டோகரன்சிகளாக மாற்றி வெளிநாட்டிற்கு பரிவர்த்தனை செய்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கைதான 5 பேரிடமிருந்து 2 லேப்டாப், ஒரு கம்ப்யூட்டர், பத்து செல்போன்கள் 27 ஏ.டி.எம். கார்டுகள், 340 சிம்கார்டுகள், ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ரொக்கம், ஒரு கார் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இதேபோன்று தரகர்கள் செயல்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.