மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி போலி கால் சென்டர் மூலம் மோசடி செய்த 3 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். போலி மென்பொருள் மூலம் பயனர்களிடம் நூதன முறையில் மோசடி செய்யும் இது போன்ற போலி கால் சென்டர்கள் நாடு முழுவதும் செயல்படுவது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கணினி பயன்படுத்துபவர்கள் உரிமம் பெற்ற மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மென்பொருளை பல ஆயிரம் ரூபாய் செலவழித்து வாங்கும் நிலையில், அதன் பைரேட்டட் வெர்ஷன் எனப்படும் உரிமமின்றி இயங்கும் மென்பொருளை பலர் இலவசமாகவோ, குறைந்த விலையிலோ வாங்கி உபயோகப்படுத்தி வருகின்றனர்.
இது போன்ற பைரேட்டட் வெர்ஷன் பயன்படுத்துவர்களை குறிவைத்து, குறைந்த விலைக்கு மைக்ரோசாப்டின் மென்பொருளை விற்பதாகக்கூறி அண்மையில் பல மோசடி சம்பவங்கள் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் போலி கால் சென்டர்கள் நடத்தி மோசடி வேலையில் ஈடுபட்டவர்கள் குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் சார்பில் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தமிழக சிபிசிஐடி சைபர் கிரைம் பிரிவிலும் அந்நிறுவனம் புகாரளித்துள்ளது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி போலீசார், சென்னை அம்பத்தூரில் இயங்கும் ஐட்ரோப் டெக்னாலஜி என்ற போலி கால் சென்டர் உள்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் சோதனை நடத்தினர். இதனை அடுத்து தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், போலி கால்சென்டர்கள் நடத்தி உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பெயரில் மோசடி வேலை நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக தெரிவித்த சிபிசிஐடி போலீசார், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணையதளம் போன்றும், அவர்களது புகார் எண் போன்றும் போலியாக உருவாக்கி பயனர்களை நம்ப வைத்ததாகவும், அவர்களிடம் தொடர்ந்து பேசி குறைந்த விலையில் உரிமம் பெற்ற மென்பொருளை விற்பதாகக்கூறி தங்களது மென்பொருளை வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதனை அடுத்து, தங்களது மென்பொருளை பதிவிறக்கம் செய்யும் பயனர்களின் கணினியை, போலி கால்சென்டர்களில் இருந்தபடியே கட்டுப்படுத்தும் மோசடி கும்பல், அதில் தொழில்நுட்பக் கோளாறுகளை ஏற்படுத்துவார்கள்.
இதனை அடுத்து தங்களை தொடர்பு கொள்ளும் பயனர்களிடம், அதனை சரிசெய்வது போல் பல லட்ச ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாகவும் சிபிசிஐடியின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதே போன்று, அந்த மென்பொருள் மூலம் கணினிகளை தாக்கும் வைரஸ்களை பதிவிறக்கச் செய்து தரவுகள் திருடப்படுவதாகவும், அதனை திருப்பித்தர பணம் அல்லது டாலர்களாக கேட்டு மிரட்டுவதாகவும் மோசடி கும்பல் மீது அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தன.
இந்நிலையில், மோசடியில் ஈடுபட்ட அம்பத்தூரில் இயங்கி வரும் ஐட்ரோப் டெக்னாலஜி நிறுவனத்தில் சோதனை மேற்கொண்ட சிபிசிஐடி போலீசார், முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்ததுடன், அதன் இயக்குநர்களான விவேக், முகமது உமர், ராஜேஷ் ஆகியோர் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, மைக்ரோசாப்ட் பெயரை பயன்படுத்தி மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரையும், வரும் 30ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. முன்னதாக, நேற்று கைதான மூவரையும் சிபிசிஐடி போலீசார் சைதாப்பேட்டை 16ஆவது நீதிமன்ற நடுவர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுத்தினர். போலி மைக்ரோசாப்ட் மென்பொருள் தொடர்பாக மேலும் பல மோசடி கும்பலை பிடிக்க வேண்டி உள்ளதால் இந்த மூவரையும் காவலில் எடுக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.