மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மசோதாவை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வங்கி தனியார்மயமாகலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளைச் சேர்ந்த சுமார் 10 லட்சம் ஊழியர்கள் 2 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் சுமார் 80 ஆயிரம் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கோயம்புத்தூர் ரயில் நிலையம் எதிரே உள்ள பாங்க் ஆஃப் பரோடா வளாகத்தில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் கலந்துக் கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
சேலம் கோட்டை பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு வங்கி தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதேபோல மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மத்திய அரசை எதிர்த்து பொதுத்துறை வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.