தமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய ஒமைக்ரான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நைஜிரியாவில் இருந்து சென்னை வந்த 47 வயது ஆண் ஒருவருக்கு, மரபணு பரிசோதனையில் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சென்னையை சேர்ந்த அந்த நபர் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்தி கொண்டதாக கூறினார். அந்த நபரும் அவருடன் தொடர்பில் இருந்த குடும்பத்தினர் உள்பட 7 பேரும் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எஸ் வகை தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மக்கள் பதற்றம் அடைய தேவையில்லை என்றும், ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை அரசுக்கு அளிக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார். இந்தியாவில் ஏற்கனவே 9 மாநிலங்களில் 68 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளது.