சென்னை மாநகராட்சி எல்லைக்குள் அமைந்துள்ள மஞ்சம்பாக்கம்- திருவொற்றியூர் சுங்கச்சாலை, பொத்தல் விழுந்து குண்டும் குழியுமாக வாகனங்கள் செல்லத் தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது.
சுங்கக்கட்டணம் வசூலிப்பதில் செலுத்தும் கவனத்தை, சாலையை முழுமையாகச் சீரமைப்பதிலும் காட்ட வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலக வரைபடத்தை பிய்த்து போட்டது போல சிதறல் சிதறலாக காணப்படும் இந்த சாலை மஞ்சம்பாக்கம் - திருவொற்றியூர் சுங்கச்சாவடி நெடுஞ்சாலை..!
மாநகராட்சிப் பகுதிகளுக்குள் சுங்கச்சாவடி அமைக்ககூடாது என்ற தேசிய நெடுஞ்சாலை ஆணைய விதியை மீறி கடந்த 3 ஆண்டுகளாக பெருநகர சென்னை மாநகராட்சியின் மாதவரம் மண்டலத்துக்கு உட்பட்ட மஞ்சம்பக்கத்தில் சுங்கச்சாவடி அமைத்து சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றது.
இந்த சுங்கச்சாவடியை தினமும் ஆயிரக்கணக்கான கண்டெய்னர் லாரிகள், ஏராளமான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இதனால் நாள் ஒன்றுக்கு 5 லட்சம் ரூபாய் வரை இந்த சுங்கச்சாவடி மூலம் வசூலிப்பதாக கூறப்படுகின்றது. வாங்குகின்ற பணத்துக்கு தக்கவாறு சாலைகளை பராமரிப்பதில்லை என்பதற்கு சாட்சி தான் இந்த பொத்தல் விழுந்த சாலையின் காட்சிகள்..!
பெருமழைக்கு பின்னர் சீர்கெட்ட இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளாததால், துறைமுகத்தில் இருந்து மஞ்சம்பாக்கம் நோக்கி வரும் வாகனங்கள் இந்த சிதறுண்ட இந்த வேல்டு மேப் சாலையில் தாவித்தாவி துள்ளிக் குதித்துச் செல்கின்றன.
இரு சக்கரவாகன ஓட்டிகள் கம்பி மேல் நடப்பது போல, உயிரைப் பணயம் வைத்து கனரக வாகனங்களுக்குள் சிக்காமல் தப்பி பிழைத்து செல்வதாகவும், அப்படி இருந்தும் ஒரு சிலர் விபத்தில் சிக்கிக் கொள்வதாகவும் லாரி ஓட்டுனர்கள் தெரிவிக்கின்றனர்
வசூலிக்கும் சுங்கக் கட்டணத்திற்காக, குறைந்த பட்சம் சாலையை சரி செய்வதிலாவது சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் அக்கறை செலுத்த வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் ஆதங்கமாக உள்ளது
அண்மையில் இந்த பகுதியில் பயணித்த அரசு அதிகாரிகள் அறிவுறுத்திய பின்னரும் இந்த சாலையை சீரமைக்கும் பணி முழுமையடையவில்லை என்று கூறப்படும் நிலையில், இந்த சீர்கெட்ட சாலையால் தங்கள் வாகனங்களின் உதிரி பாகங்கள் சேதமடைவதாக வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்
ஒன்று சாலையை விரைவாக சீரமைக்க வேண்டும் அல்லது சாலையை சீரமைக்கும் வரை சுங்கக் கட்டணம் வசூலிப்பதையாவது ரத்து செய்ய வேண்டும் என்பதே இந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளின் ஆதங்கமாக உள்ளது