திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூர் அருகே வழிவிடமறுத்ததால், அரசுப் பேருந்து ஓட்டுனரை தாக்கி சட்டையை கிழித்து கொலை மிரட்டல் விடுத்த டாடா ஏஸ் வாகன ஓட்டுனரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவள்ளூரில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் அரசுப் பேருந்து ஒன்று திருப்பாச்சூர் பகுதியில் பயணிகளை இறக்கிவிட நின்று கொண்டிருந்தது. அந்த பேருந்துக்கு பின்னால் வந்த டாடா ஏசி வாகனம் ஒன்று அந்த பேருந்து அருகே சாலையை மறித்து நின்றதோடு அதில் இருந்து இறங்கிய இளைஞன், ஏன் தனது வாகனத்துக்கு வழி விடவில்லை எனக்கூறி பேருந்து ஓட்டுனரான கார்த்திகேயனை தாக்கினான்.
பேருந்து ஓட்டுனர் கார்த்திகேயன் தடுக்க முயன்றதோடு திருப்பி தாக்கியதால், ஆத்திரம் அடைந்து இளைஞன், அவரது கையை பிடித்து இழுத்து சட்டையையும் கிழித்து பகிரங்க கொலை மிரட்டல் விடுத்தான்
இதைதொடர்ந்து பேருந்துக்குள் இருந்த பயணிகள் அந்த டாடா ஏஸ் ஓட்டுனரை மடக்கி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர், நடத்துனர் ஓடிச்சென்று அந்த வாகனத்தின் சாவியை எடுத்து வைத்துக் கொண்டார்
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரிடம் அந்த அடாவடி இளைஞன் ஒப்படைக்கப்பட்டான். விசாரணையில் அவன் கடம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த சாரதி என்பது தெரியவந்தது. காயமடைந்த அரசு பேருந்து ஓட்டுனர் கார்த்திகேயன் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் டாட்டா ஏஸ் வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் பேருந்தில் பயணித்த 40க்கும் மேற்பட்ட பயணிகளை மற்றொரு பேருந்து வரவழைக்கப்பட்டு அதில் அனுப்பி வைத்தனர். முந்திச்செல்ல வேண்டும் என்ற ஆத்திரத்தால் வம்பிழுத்து கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் அந்த 20 வயது தம்பி என்று போலீசார் சுட்டிக்காட்டுகின்றனர்.