மயிலாடுதுறை அரசு மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியைக்கு எதிராக ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் தனது காரில் அரசு மடிக்கணினிகளை எடுத்துக் கொண்டு தப்ப முயன்ற தலைமை ஆசிரியையின் காரை மடக்கிப் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கோமலில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1084 மாணவர்கள் பயின்று வருகின்றனர். 34 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியையாக சித்ரா என்பவர் பணிபுரிந்து வருகின்றார்.
கடந்த 7-ஆம் தேதி தலைமை ஆசிரியர் சித்ராவின் அறைக்குள் ஆசிரியர் செந்தில் என்பவர் காலில் காலணி அணிந்து உள்ளே சென்றதால், மாணவர்கள் மத்தியில் அவமானப்படுத்தியதாக கூறப்படுகின்றது. இதனால் பள்ளியிலேயே தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி மேற்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார். அரசு பள்ளியில் நீலாம்பரி போல வலம் வருவதாக குற்றஞ்சாட்டிய ஆசிரியர்கள் தங்களை கொத்தடிமைகள் போல நடத்தும் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, மாவட்ட கல்வி அலுவலகத்தில் மனு அளித்தனர்.
ஆசிரியர்களின் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வெள்ளிக்கிழமை தலைமை ஆசிரியர் சித்ரா மீண்டும் பள்ளிக்கு பணிக்கு வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியர்கள் 20க்கும் மேற்பட்டோர் ஆசிரியர்கள் வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போடாமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் நடுவே தலைமை ஆசிரியை சித்ரா தனது காரில் பள்ளியை விட்டு வெளியேற முயற்சித்தபோது, பெற்றோர், ஆசிரியர் சங்கத்தினர் காரை வழிமறித்து வாக்குவாதம் செய்தனர்.
காருக்குள், கடந்த ஆண்டு மாணவர்களுக்கு வழங்க வேண்டிய 36 மடிக்கணினிகள் மறைத்து வைத்து இருப்பதை கண்டு மாணவர்களின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து தலைமை ஆசிரியையை வெளியேற விடாமல் பள்ளி வளாகத்தின் வாசல் கதவை அடைத்து பூட்டினர். தகவலறிந்து வந்த பாலையூர் காவல் ஆய்வாளர் விசித்ராமேரி மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
3 மணி போராட்டத்திற்கு பிறகு தலைமை ஆசிரியர் மீது விசாரணை நடத்தி துறைரீதியான நடவடிக்கை எடுக்க கல்வித்துறைக்கு பரிந்துரைக்கப்படும் என காவல்துறையினர் அளித்த உத்தரவாதத்தை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.