ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்திருந்தபோது, பிபின் ராவத் தன்னிடம் தண்ணீர் கேட்டதாகவும், சரிவான பகுதியில் அவர் சிக்கியிருந்ததால் அவரை உடனடியாக மீட்க முடியவில்லை என்றும் விபத்தை நேரில் பார்த்த சிவக்குமார் என்பவர் தெரிவித்துள்ளார்.
நேற்று குன்னூர் அருகே விமானப்படையின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படைகளின் தலைமைத் தளபதி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இந்த விபத்தை நேரில் பார்த்த சிவக்குமார், தான் நடந்து சென்றபோது ஹெலிகாப்டர் ஒன்று விபத்தில் சிக்கியதாக தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றபோது மரங்களில் மோதிய நிலையில் ஹெலிகாப்டர் ஒன்று தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்ததாக தெரிவித்தார்.
இதனை அடுத்து, ஹெலிகாப்டரில் இருந்து வெளியே விழுந்திருந்த 3 பேர் உயிருடன் இருந்ததை கண்டறிந்ததாகவும், அதில் ஒருவர் காப்பாற்றும் படி அழைத்து, தண்ணீர் கேட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சிறிது நேரத்தில் அவர் மீட்கப்பட்ட நிலையில், தன்னிடம் தண்ணீர் கேட்டது பிபின் ராவத் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்ததாக சிவக்குமார் கூறினார்.