முப்படைகளின் தலைமைத் தளபதியான பிபின் ராவத், நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனின் நடைபெறவிருந்த ராணுவ கருத்தரங்கில் பங்கேற்க நேற்று காலை 9 மணியளவில் எம்ப்ரேர் ரக விமானத்தில், தனது மனைவி மற்றும் 7 பேர் டெல்லியில் இருந்து தமிழ்நாடு புறப்பட்டனர்.
காலை 11.35 மணியளவில் கோயம்புத்தூர் அடுத்த சூலூர் விமானப்படை தளத்தில் விமானம் தரையிறங்கிய நிலையில், 11.48 மணியளவில் இந்திய விமானப்படையின் எம்.ஐ.-17வி5 ரக ஹெலிகாப்டரில் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு பயணமாகினர்.
ஹெலிகாப்டர் புறப்பட்ட 35 நிமிடத்தில் குன்னூருக்கு அருகே மரங்கள் சூழ்ந்த பகுதியில் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதை அடுத்து அப்பகுதி மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதனை அடுத்து, பிற்பகல் 12.45 மணியளவில் தீயணைப்புத்துறையினர், ராணுவ வீரர்கள் உள்ளிட்டோர் விபத்து நிகழ்ந்த இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
பிற்பகல் 3 மணியளவில் விபத்து தொடர்பாக பிரதமர் மோடியிடம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கமளித்தார். மாலை 6.03 மணியளவில் விபத்தில் பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.