ஆந்திராவில் இருந்து சவுக்கு லாரியில் சென்னை வந்து, வீட்டின் ஜன்னலோரம் படுத்து தூங்கும் பெண்களை மட்டும் குறி வைத்து தாலிச் சங்கிலியை பறிக்கும் கொள்ளையனை ஆந்திராவில் வைத்தே தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் கடந்த மாதம் வேளச்சேரி, மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், நந்தம்பாக்கம் ஆகிய பகுதிகளில், இரவு நேரத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் பெண்களிடம் தங்கச் சங்கிலி, நகைகள் திருடப்பட்டதாக புகார்கள் பதிவாகின.
அனைத்து புகார்களிலும் செயின் பறிப்பு சம்பவங்கள் இரவு நேரத்தில் மட்டுமே நடந்திருப்பதும், நெரிசலாக வீடுகள் நிறைந்த பகுதியில் ஜன்னல் வழியாக பெண்களின் தாலி சங்கிலிகளை பறித்துச் சென்றிருப்பதையும் போலீசார் கண்டுப் பிடித்தனர்.
இந்நிலையில், திருட்டு நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்தும் பழைய குற்றவாளிகளின் பட்டியலை ஒப்பிட்டும் போலீசார் விசாரணையை நடத்தினர். சிசிடிவியில் பதிவான காட்சியில் இருந்த நபரின் அடையாளத்தை வைத்து, கடந்த 2018-ம் ஆண்டு, மடிப்பாக்கம் காவல் நிலைய பகுதியில் நடந்த குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் தான் என்பதை உறுதி செய்தனர். ஆந்திர மாநிலம் நகரியை சேர்ந்த திருலோகசந்தர் என்ற அந்த கொள்ளையனைப் பிடிக்க தனிப்படை போலீசார் முடிவு செய்தனர்.
செல்போன் நெட்வொர்க்கை வைத்து ஆந்திரமாநிலம், சித்தூர் மாவட்டப் பகுதியான நகரிக்கு சென்ற தனிப்படை, 65 வயதான திருலோக்சந்தரை கைது செய்தனர்.
சென்னை அழைத்து வரப்பட்ட திருலோகச்சந்தரிடம் நடத்திய விசாரணையில், ஆந்திராவில் இருந்து சென்னைக்கு சவுக்கு கட்டைகளை ஏற்றி வரும் லாரியில் கூலித் தொழிலாளி போல் பயணித்து வந்தது தெரியவந்தது.
இரவு நேரத்தில் வீட்டின் ஜன்னலோரமாக அயர்ந்து தூங்கும் பெண்களை குறிவைத்து, தங்க தாலி சங்கிலிகளை பறிப்பதை வாடிக்கையாக கொண்டதும், திருடும் சங்கிலிகளை, நகரியில் அடமானக் கடை நடத்தி வரும் வியாபாரியிடம், சவரன் ஒன்றுக்கு 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விற்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து திருட்டு நகைகளை வாங்கிய 39 வயதான உகுமாராம் என்பவரையும் வேளச்சேரி போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 7 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். இருவரையும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.