சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் சரவணா செல்வரத்னம் குழுமங்களுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் மறைத்தது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் 1,000 கோடி ரூபாய்க்கு மேல் வருவாயையும், 150 கோடி ரூபாய் மதிப்பில் பொருட்களை வாங்கியது தொடர்பான கணக்கையும் மறைத்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், சரவணா செல்வரத்தினம் நிறுவனம், போலி ரசீதுகளை உருவாக்கி 80 கோடி ரூபாய் வருவாயை கணக்கில் காட்டவில்லை என்றும், தங்களுக்கு சொந்தமான இடங்களை வாடகைக்கு விட்டது, தங்கம் உள்ளிட்டவை வாங்கி விற்றது தொடர்பான கைப்பற்றப்பட்ட ரசீதுகள் மூலமாக 7 கோடி ரூபாய் அளவிற்கு கணக்கு மறைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த இரு குழுமங்கள் தொடர்புடைய இடங்களில் 10 கோடி ரூபாய் கணக்கில் வராத ரொக்கமும், 6 கோடி மதிப்பிலான நகைகளும் பறிமுதல் செய்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.