சேலம் விபத்தில் சிக்கி மயக்கம் அடைந்த கூலித் தொழிலாளியை தக்க சமயத்தில் காப்பாற்றிய மருத்துவருக்கு பாராட்டுத் தெரிவித்துள்ள மருத்துவமனை டீன், மருத்துவர்கள் அனைவரும் மருத்துவ கிட்டை எப்போதும் வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையின் கண்காணிப்பாளரான டாக்டர் தனபால், இரும்பாலை பகுதியில் உள்ள அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரிக்கு சென்றுகொண்டிருந்தார். சூரமங்கலம் புது ரோடு பகுதியில் கூலித் தொழிலாளி ஒருவர் விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடுவதைக் கண்ட அவர், காரில் வைத்திருந்த மருத்துவ கிட்டை வைத்து முதலுதவி அளித்துள்ளார்.
அப்போது, அந்த வழியாக வந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் வள்ளி சத்தியமூர்த்தியும் உதவியதால் கூலித்தொழிலாளி காப்பாற்றப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
உரிய நேரத்தில் சிகிச்சை அளித்த டாக்டர் தனபாலைப் பாராட்டியுள்ள மருத்துவமனை டீன் வள்ளி சத்தியமூர்த்தி, மருத்துவர்கள் தங்கள் வாகனங்களில் மருத்துவ கிட்டை உடன் வைத்திருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இதுபோன்ற தருணங்களில், விபத்துகளில் பாதிக்கப்படும் நபரை உடனடியாகக் காப்பாற்ற மருத்துவ கிட் மிகவும் உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.