கோயம்புத்தூரில் பணிக்கு வர மறுத்ததாக கூறி, வடமாநில பெண் தொழிலாளியை, தனியார் ஸ்பின்னிங் மில் மேலாளர் கொம்பால் தாக்கியதாக கூறப்படும் வீடியோ வைரலான நிலையில், மேலாளர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
சரவணம்பட்டியில் செயல்பட்டு வரும் இந்த தனியார் ஸ்பின்னிங் மில்லில் சுமார் 800-க்கும் மேற்பட வடமாநிலத்தவர்கள் அங்கேயே விடுதியில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், அங்குள்ள ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளி ஒருவரை வேலைக்கு வர மறுத்ததாக கூறி மேலாளர் முத்தையாவும், காப்பாளர் லதாவும் சேர்ந்து கொடூரமாக தாக்கியதாக கூறப்படும் காட்சிகள் வைரலாகின.
இதனையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், பெண் வன்கொடுமை உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மூன்று, நான்கு நாட்களாக வேலைக்கு வராமல் இருந்ததால், நேரில் சென்று கேட்டதாகவும், அதற்கு அந்த பெண் தாக்கியதால் பதிலுக்கு தாங்களும் தாக்கியதாகவும் ஸ்பின்னிங் மில் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.