இராமநாதபுரம் அருகே ஒப்பந்த அடிப்படையில் வாடகைக் கார்களை வாங்கி, அவற்றை சூதாட்டத்தில் வைத்து விளையாடி உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேர்வை சந்து பகுதியைச் சேர்ந்த முனியசாமி என்பவர், வேறொருவரிடம் காரை ஒப்பந்த அடிப்படையில் வாங்கி வாடகைக்கு ஓட்டி வந்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம் அவரை அணுகிய 3 பேர் கும்பல், அந்தக் காரை தங்களிடம் ஒப்பந்த அடிப்படையில் கொடுத்துவிட்டு, இன்னொரு காரை எடுத்து வாடகைக்கு ஓட்டினால் இரட்டை வருமானம் வரும் என ஆசை காண்பித்துள்ளனர்.
அதனை நம்பி அவர்களிடம் முனியசாமி காரை ஒப்படைத்துள்ளார். சில மாதங்களுக்கு வாடகையைக் கொடுத்த அவர்கள், அதன் பின்னர் சரிவர வாடகை கொடுக்காமல் அலைக்கழித்துள்ளனர்.
இதுகுறித்து போலீசில் புகாரளிக்கப்பட்ட நிலையில், இதே பாணியில் பலரிடம் கார்களை வாங்கி, மதுரையிலுள்ள சூதாட்டக் கிளப்பில் அடகு வைத்து, சீட்டு விளையாடி உல்லாசமாக ஊர் சுற்றி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து சுப்பிரமணி, கார்த்திக், இளையராஜா என்ற அந்த மூவரையும் கைது செய்த போலீசார் 19 கார்களை பறிமுதல் செய்தனர்.