காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்...
அண்மையில் தொடர்ந்து பெய்த கனமழையால் தமிழ்நாட்டில் பல மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளான நிலையில், அம்மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏரி, சுரங்கப்பாதை உள்ளிட்ட இடங்களை பார்வையிட்ட அவர் பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களையும் வழங்கினார்.
போரூர் ஏரிக்கு சென்று ஆய்வு நடத்திய முதலமைச்சர், அங்கு வரைபடம் மூலமாக, ஏரியின் பரப்பு குறித்தும் அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாகவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், மழை வெள்ளதால் பாதிப்புக்குள்ளான இடங்களில் முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், மாங்காடு சுரங்கப்பாதையில் ஆய்வு நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்பகுதியில் உள்ள நீர் வழித்தடங்களை தூர்வார தேவையான பணிகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதனை அடுத்து, ஐயப்பன்தாங்கல் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்தார். பின்னர், பொதுமக்களுக்கு காலை உணவுகள் அளித்து அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களையும் வழங்கினார்.
பிறகு மழை வெள்ளம் பாதித்த பல்வேறு பகுதிகளுக்கும் சென்று ஆய்வு நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்பகுதியில் உள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்து அவர்களிடம் மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.