ஆன்லைனில் நடக்கின்ற இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் வாக்களித்தால், மாநாடு படத்திற்கு இலவசமாக டிக்கெட் தருவதாகக் கூறி திரையரங்கு வாசலில் அமர்ந்து காங்கிரசார் உறுப்பினர் சேர்க்கை நடத்திய கூத்து கோவையில் அரங்கேறியுள்ளது.
மாநாட்டிற்கு காசு கொடுத்து ஆட்களை அழைத்துச்செல்லும் அரசியல் கட்சிகளை பார்த்திருப்போம், ஆனால் மாநாடு படத்திற்கு இலவசமாக டிக்கெட் தருவதாகக் கூறி படம் பார்க்க வரும் இளைஞர்களை கட்சியில் சேர்க்கும் நூதன முயற்சியில் இறங்கி இருக்கின்றனர் கோவை இளைஞர் காங்கிரசார்..!
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சிம்புவுக்கு மாநாடு படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கின்றது. இந்தப்படம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில், கோவை சுந்தராபுரம், அரசன் திரையரங்கில் மாநாடு படம் பார்க்க செல்லும் இளைஞர்களிடம் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டையுடன் வந்து ஆன்லைனில் காங்கிரசுக்கு ஒரு ஓட்டு போட்டால், மாநாடு படத்துக்கு இலவசமா டிக்கெட் தருகிறோம் என்று சொல்லி கட்சிக்கு ஆள் சேர்த்து வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது
இது தொடர்பாக விசாரித்த போது இளைஞர் காங்கிரசுக்கு இந்திய அளவில் ஆன் லைன் மூலம் தேர்தல் நடப்பதாகவும், தலைவர் துணைதலைவர், செயலாளர், இணை செயலாளர், மற்றும் மாவட்ட தலைவர் ஆகிய பதவிகளுக்கு ஆன்லைன் மூலம் வாக்கு பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது. வருகின்ற 7ஆம் தேதி இந்த வாக்களிப்புக்கு கடைசி நாள் என்பதால் தெரு தெருவாக இளைஞர்களை தேடிப்பிடித்து, ஆதார்கார்டை எடுத்து வரச்சொல்லி ஆன்லைனில் வாக்களிக்க கூறுவது சிரமமான காரியம் என்பதால் , திரையரங்கு வாசலில் அமர்ந்து கொண்டு மாநாடு படம் பார்க்க வரும் இளைஞர்களை குறிவைத்து காங்கிரஸுக்கு ஒரு ஓட்டு போடச்சொல்லி இலவச டிக்கெட் ஆசையை காங்கிரசார் தூண்டிவருவது தெரியவந்துள்ளது.
காங்கிரசாரின் இந்த ஓசி டிக்கெட் ஆபரை ஏற்று சிலர் வாக்காளர் அடையாள அட்டையுடன் சென்று வாக்களித்து மாநாடு பார்க்க சென்றாலும் , பலர் வீட்டுக்கு போய் எடுத்து வருவதாக கூறி அங்கிருந்து சாமர்த்தியமாக தப்பிச்சென்று விடுகின்றனர்