தமிழ்நாட்டில் அரசு பணிகளுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித் தாளை கட்டாயமாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசுப் பணிகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி., டி.ஆர்.பி., எம்.ஆர்.பி., சீருடைப் பணியாளர் தேர்வாணையம் ஆகியவை போட்டித்தேர்வுகள் நடத்துகிறது. இந்நிலையில் போட்டித்தேர்வுகளில் தமிழக இளைஞர்களுக்கு 100 சதவீத இடங்களை உறுதி செய்யும் வகையில், தமிழ் மொழித் தாளை கட்டாயமாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி.யின் க்ரூப்-1, க்ரூப்-2, க்ரூப்-2ஏ உள்ளிட்ட தேர்வுகளின் பொதுத்தமிழ், பொது ஆங்கிலம் தாள்களில் ஆங்கிலத் தாள் நீக்கப்பட்டு தமிழ் மொழித் தாள் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலும், தமிழ் மொழித் தாளுக்கான பாடத்திட்டம் 10-ஆம் வகுப்பு தரத்தில் அமையும் என்றும் குறைந்தபட்சம் 40 சதவீதம் மதிப்பெண்களைப் பெற வேண்டும் என குறிப்பிட்ட தமிழக அரசு, தமிழ் மொழி தாளில் தேர்ச்சி பெறாவிட்டால் பிற தாள்கள் மதிப்பீடு செய்யப்படாது என்றும் வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது.