சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே, ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அபகரிப்பதற்காக, திருமணமாகாத 74 வயது விவசாயியை நிலத்தில் கொன்று புதைத்த இருவரை, 9 மாதங்கள் கழித்துப் போலீசார் கைது செய்துள்ளனர். மாயமான வழக்கு, போலீசாரால் கிடப்பில் போடப்பட்ட நிலையில், நீதிமன்றம் தலையிட்டதால் விவசாயி கொலை வெளிச்சத்திற்கு வந்த பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அடுத்த அரியக்கண்டன்பட்டியைச் சேந்தவர் 74 வயது விவசாயி சுப்ரமணி . திருமணமாத இவருக்கு சொந்தமாக சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கல்பகனூர் சிவகங்காபுரம் பகுதியில் 7.14 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. விவசாயம் செய்து விட்டு சுப்பிரமணி தனது சொந்த ஊருக்கு தனியாக செல்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் சிவகங்காபுரம் சென்ற விவசாயி சுப்பிரமணி மாயமானார்.
இதுகுறித்து சுப்பிரமணியின் உறவினரான கனகம் என்பவர், நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்மீது போலீசார் நடவடிக்கை எடுக்காதது குறித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்ததால், 9 மாதங்கள் கடந்த நிலையில், நாமக்கல் எஸ்பி சரோஜ் குமார் தாகூர் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை விசாரணையில், சுப்பிரமணிக்கு சொந்தமாக சிவகங்காபுரம் பகுதியில் உள்ள 7.11 ஏக்கர் விவசாய நிலத்தை, ஒரு கோடியே 26 லட்சம் ரூபாய்க்கு அதே பகுதியில் உள்ள பெருமாள் என்பவரிடம் விலை பேசி விற்பனை ஒப்பந்தம் போடப்பட்டு, 10 லட்சம் ரூபாய் முன் தொகையாகப் பெற்றிருந்தும், மேற்கொண்டு பணம் கொடுக்க மறுத்த பெருமாளுக்கும், சுப்பிரமணிக்கும் பிரச்சினை ஏற்பட்டது தெரியவந்தது.
மாயமான அன்று கடைசியாக சுப்பிரமணியை செல்லியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராமதாஸ், அவரது நண்பர்களான அறிவழகன், கல்பகனூர் முத்துக்குமார் ஆகியோருடன் பார்த்ததாக போலீசாரிடம் சிலர் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேரிடமும் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தியதில், வாரிசு இல்லாத சொத்துக்காக நடந்த திகில் கொலைச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
நிலம் விற்பனை தொடர்பாக சுப்ரமணி மற்றும் பெருமாள் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் பெருமாளுக்கு ஆதரவாக ராமதாஸ், முத்துக்குமார், அறிவு, சிவகங்கா புரம் சக்திவேல் உட்பட ஐந்து பேர் சேர்ந்து சுப்பிரமணியை மிரட்டி, கொடுத்த பணத்துக்கு மொத்த நிலத்தையும் எழுதிக்கேட்டுள்ளனர். அவர் எழுதிக்கொடுக்க மறுத்ததால், அவரைக் கொலை செய்து சக்திவேல் விவசாய நிலத்தில் கரும்புக்கு உரமாக புதைத்து உள்ளதாக போலீசாரிடம் அளித்துள்ள வாக்கு மூலத்தில் தெரிவித்தனர்.
இதையடுத்து கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராமதாஸ் , அறிவழகன் ஆகியோரை சிவகங்காபுரம் பகுதியில் உள்ள சக்திவேல் விவசாய நிலத்தில், கொன்று புதைக்கப்பட்ட விவசாயி சுப்பிரமணியின் சடலத்தைத் தோண்டி எடுப்பதற்காக அழைத்து வந்தனர். அங்கு சடலம் புதைக்கப்பட்ட இடத்தை அவர்கள் அடையாளம் காட்ட, அங்கிருந்து தோண்டி எடுக்கப்பட்ட சடலத்தின் எலும்பு உள்ளிட்ட பாகங்கள் ரசாயன பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
விவசாயி மாயமான வழக்கில் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ததால், ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, பொறுப்பாக விசாரித்து போலீசாரால் கொலைக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.