பெண் குழந்தைகள் பாதிக்கப்பட்டது தொடர்பான செய்திகளை நாம் உடனடியாக அறிந்து கொள்ளவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கிடைக்கவும், ஊடகங்கள் பெருமளவில் உதவியாக உள்ளதாக உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண் குழந்தைகளின் அடையாளங்களை வெளிப்படுத்தும் செய்தித்தாள்கள், ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களின் உரிமத்தை ரத்து செய்யக் கோரி, மதுரையை சேர்ந்த கிருபா பிரியதர்ஷினி என்பவர் தொடர்ந்த வழக்கில் இவ்வாறு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு தெரிவித்துள்ளது.
மேலும், பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களை மாற்றம் செய்தும், அடையாளங்களை மறைத்தும் தான் ஊடகங்களில் செய்திகள் வெளியிடுகின்றனர் என்றும், செய்தியாளர்களும் மனிதர்கள் தான் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், வழிகாட்டுதல்களை முறையாக கடைப்பிடிப்பது ஊடகத் துறையினரின் கடமை என கருத்து தெரிவித்த நீதிபதிகள், வழக்கு குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை செயலர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.