மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்துச் சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்கிற நடைமுறை தொடர்ந்திட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் தனது அறிக்கையில், தமிழ்நாட்டிலே பல நூற்றாண்டுக் காலமாகச் சித்திரை மாதப் பிறப்பு தான் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு எனக் கூறி 2008ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டதையும், 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அந்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டதையும் குறிப்பிட்டுள்ளார்.
பொங்கலுக்குத் தமிழ்நாடு அரசு வழங்கவுள்ள பரிசுப் பையில் இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் எனக் குறிப்பிட்டுள்ளது ஒரு வகையான கருத்துத் திணிப்பு என்றும் தெரிவித்துள்ளார்.