அந்தமான் கடல் பகுதியில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மத்திய வங்கக் கடலில் புயலாக மாறும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. உருவாகவுள்ள புதிய புயலுக்கு ஜாவித் என பெயரிடப்பட உள்ளது.
அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது. அதனைத் தொடர்ந்து நாளை புயலாகவும் மேலும் வலுப்பெற்று, மத்திய வங்கக் கடல் பகுதிக்கு நகரக் கூடும்.
இதனையடுத்து, வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிரமாக வலுப்பெற்று வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா இடையே நாளைமறுநாள் அதிகாலை கரையை கடக்கக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.இந்தப் புயலுக்கு ஜாவித் என பெயர்சூட்டப்பட உள்ளது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசா மாநிலத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அந்தமான் கடல், அதனை ஒட்டிய தென் மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் அதிகபட்சமாக மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காற்றின் திசை வேறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒருசில இடங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இருநாட்களுக்கு ஒரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.