அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 13 லட்சம் ரூபாய் பணம் மோசடி என அளிக்கப்பட்ட புகாரில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளரை சேலம் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளரான மணி, நெய்வேலியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரிடம் மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 13லட்சம் ரூபாய் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.
பின்னர், வேலையும் வாங்கித் தராமல், பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றிவிட்டதாக கடந்த மாதம் தமிழ்ச்செல்வன் சேலம் எஸ்.பி.யிடம் புகாரளித்திருந்தார்.
இதனையடுத்து, எஸ்.பி.யின் உத்தரவின் பேரில், புகாரை விசாரித்த குற்றத்தடுப்பு பிரிவு போலீசார், மோசடி, பணம் பறித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து, தலைமறைவாக இருந்த மணியை தேடி வந்தனர். இந்த நிலையில், அதிகாலையில் நடுப்பட்டியிலுள்ள வீட்டுக்கு வந்த மணியை போலீசார் கைது செய்தனர். மோசடிக்கு உடந்தையாக செயல்பட்ட மணியின் நண்பர் செல்வக்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.