வருங்காலத்தில் சென்னை ஐஐடியில் அனைத்து விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுவதை உறுதி செய்யும்படி அதன் இயக்குநருக்குத் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடிதம் எழுதி உள்ளார்.
சென்னை ஐஐடியில் நவம்பர் 20 அன்று பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடாமல் தவிர்த்ததற்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில் அமைச்சர் பொன்முடி எழுதியுள்ள கடிதத்தில், ஐஐடி தொடங்கத் தமிழ்நாடு அரசு 250 எக்டேர் நிலம் கொடுத்ததுடன், அதன் வளர்ச்சிக்குப் பல்வேறு வகைகளில் பங்களித்து வருவதைச் சுட்டிக் காட்டியுள்ளார்.
அண்மையில் தமிழ்நாடு அரசிடம் ஐ.ஐ.டி. 10 கோடி ரூபாய் நிதியுதவி கோரியுள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளார். தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர், பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கூடத் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும் மரபு இருந்துவரும் நிலையில் பட்டமளிப்பு விழாவில் அதைப் புறக்கணித்தது வருத்தம் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.