தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய இரு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருவதால் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோவிலின் வெளி மண்டபங்களில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்துப் பாய்ந்ததுடன், கோவிலுக்குள்ளும் நீர் தேங்கியுள்ளது.
திருச்செந்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாகக் கனமழை பெய்து வருகிறது. காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், பின்னர் ஒரு மணி முதல் பிற்பகல் மூன்று மணி வரையும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
திருச்செந்தூர் முருகன் கோவில் வெளிமண்டபங்களில் முழங்காலளவு மழைநீர் பெருக்கெடுத்துப் பாய்ந்தது. உள்மண்டபத்திலும் மழைநீர் தேங்கியது.
நாழிக்கிணற்றுக்குச் செல்லும் நடைபாதையில் வாய்க்காலில் செல்வதுபோல் வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்ந்தது.
திருச்செந்தூரில் பிற்பகல் மூன்று மணி வரை 20 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கனமழை காரணமாக மின்சாரம் நிறுத்தப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. காயல்பட்டினம், ஆத்தூர், ஆறுமுகநேரி ஆகிய ஊர்களிலும் சாலைகள் தெருக்களில் பெருக்கெடுத்த மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது.
சாத்தான்குளம் கடைத்தெரு, வாரச்சந்தை, பள்ளி வளாகங்கள் உள்ளிட்ட அனைத்திலும் வெள்ளநீர் பெருக்கெடுத்துப் பாய்ந்தது. சாத்தான்குளம் தூய ஸ்தேவான் தொடக்கப் பள்ளி வளாகத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியதால் குழந்தைகள் வீட்டுக்குச் செல்ல முடியாமல் வகுப்பறைக்குள்ளேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
தூத்துக்குடியில் காலை முதல் பெய்த கனமழையால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது.
கோவில்பட்டி, விளாத்திக்குளம், எட்டயபுரம், கழுகுமலை, கயத்தாறு, கடம்பூர் ஆகிய ஊர்களிலும் இரண்டு மணி நேரத்திற்கு மேலாகக் கனமழை பெய்தது.
தூத்துக்குடி அருகே வாலசமுத்திரம் என்னும் ஊரில் உள்ள இரண்டு ஓடைகளுக்கு நடுவில் உள்ள குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் தீயணைப்புத் துறையினர் வடம் கட்டி அங்கிருந்த 25 பேரைப் பாதுகாப்பாக மீட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, வள்ளியூர், களக்காடு வட்டாரங்களிலும் காலை முதல் மழை பெய்தது. திசையன்விளையில் காலை முதல் தொடர்ந்து கனமழை பெய்ததால் சாலையில் குளம்போல் மழைநீர் தேங்கியுள்ளது. பிற்பகலில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால் மாணவர்கள் முழங்காலளவு தண்ணீரில் இறங்கி வீடுகளுக்குச் சென்றனர்.
திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மேலப்பாளையம் ஆகிய பகுதிகளில் கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்துப் பாய்ந்தது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
பாளையங்கோட்டையில் மாலைவரை 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அன்பு நகர் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் மழைநீர் சூழ்ந்து பொது மக்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. அவர்களை அங்கிருந்து வெளியேற்றிப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க மாநகராட்சி அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.
சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம் ஆகிய வட்டாரங்களிலும் கனமழை பெய்ததால் ஆறுகளிலும், கால்வாய்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்கிறது.