தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 5 மாவட்டங்களில் மத்தியக் குழுவினர் இரண்டாம் நாளாக இரண்டு குழுக்களாக இன்று ஆய்வு செய்கின்றனர்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை பார்வையிட சென்னை வந்துள்ள மத்தியக் குழுவினர் நேற்று ஆய்வைத் தொடங்கினர். இன்று இரண்டாம் நாளாக கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் இரு அணிகளாகப் பிரிந்து ஆய்வுப் பணிகளை மேற்கொள்கின்றனர்.
நேற்று சென்னையில் புளியந்தோப்பு வீரப்ப செட்டித் தெரு, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, அழகப்பா சாலை ஆகிய பகுதிகளில் மழை வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜபுரத்தில் வெள்ளச் சேதம் குறித்த படங்களையும், டிரோன் கேமரா மூலம் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளையும் மத்தியக் குழுவினர் பார்வையிட்டனர்.
அதன்பின் செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூர், மாமல்லபுரம், வடபட்டினம், செய்யூர் ஆகிய ஊர்களில் வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து புதுச்சேரி சென்ற அவர்கள் அங்கு ஆலோசனை மேற்கொண்டனர்.
இதேபோல் மத்திய நிதித்துறை ஆலோசகர் ஆர்.பி.கவுல் தலைமையிலான மத்தியக் குழுவின் இரண்டாவது அணியினர் கன்னியாகுமரி விருந்தினர் மாளிகையில் வெள்ளச் சேதம் குறித்த படங்களைப் பார்வையிட்டனர். அதன் பின்னர் வடக்குத் தாமரைக்குளத்தில் சேதமடைந்த தடுப்பணையையும், பல்வேறு இடங்களில் கால்வாய் உடைப்பு, சாலைகள் சேதம், பயிர்ச் சேதம் ஆகியவற்றையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.