கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்த மத்தியக் குழுவினர் மழைவெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்தனர்.
மத்திய நிதித்துறை ஆலோசகர் ஆர்.பி.கவுல், நீர்வள ஆணையத்தின் இயக்குநர் தங்கமணி, எரிசக்தித்துறை உதவி இயக்குநர் பவ்யா பாண்டே, தமிழக வருவாய்த் துறைச் செயலர் குமார் ஜெயந்த் ஆகியோர் கன்னியாகுமரி விருந்தினர் மாளிகையில் வெள்ளச் சேதம் குறித்த படங்களைப் பார்வையிட்டனர்.
அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெள்ளச் சேதம் குறித்து எடுத்துக் கூறினார். அதன் பின்னர் வடக்குத் தாமரைக்குளத்தில் சேதமடைந்த தடுப்பணையைப் பார்வையிட்டனர். குமாரகோவில், பேயன்குழி, வைக்கலூர், தேரேகால்புதூர், திருப்பதிசாரம் ஆகிய இடங்களில் கால்வாய் உடைப்பு, சாலைகள் சேதம், பயிர்ச் சேதம் ஆகியவற்றைப் பார்வையிட்டனர்.
அதே போன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்தியக் குழுவினர் பார்வையிட்டனர். வரதராஜபுரத்தில் வெள்ளச் சேதம் குறித்த படங்களையும், டிரோன் கேமரா மூலம் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளையும் பார்வையிட்டனர்.
வெள்ளம் ஊருக்குள் வராமல் இருக்க அடையாற்றின் கரையில் மணல்மூட்டைகள் அடுக்கி முன்னேற்பாடுகள் செய்ததைக் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி எடுத்துரைத்தார். அதன்பின் செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூர், மாமல்லபுரம், வடபட்டினம், செய்யூர் ஆகிய ஊர்களில் வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்தனர்.