டெல்லியில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு பார்சல் செய்யப்பட்ட காரை மறைத்து வைத்துக் கொண்டு பணம் கேட்டு கண்ணாமூச்சி காட்டும் மோசடி கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். காரின் உரிமையாளரை 3 நாட்களாக அலைக்கழிக்கவிட்டு மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ள வடமாநில கும்பலைப் பிடிக்க போலீசாரும் கண்ணாமூச்சி விளையாட்டைத் தொடங்கியுள்ளனர்.
டெல்லியைச் சேர்ந்த சச்சின் குமார் மங்கள் என்பவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அடுப்புக்கரி சார்ந்த தொழில் செய்து வருகிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன் தமிழ்நாட்டுக்கு வந்தவர், தொழில் நிமித்தம் வெளியூர் செல்வதற்காக டெல்லியில் இருந்த தனது டொயோட்டா கொரோலா காரை கோவில்பட்டி கொண்டு வர முடிவு செய்தார். இதற்காக டெல்லி சென்ற சச்சின் குமார் மங்கள், அங்குள்ள இன்டியன் கார்கோ சர்வீஸ் என்ற தனியார் பார்சல் சர்வீஸ் நிறுவனத்திடம் காரை ஒப்படைத்து, கோவில்பட்டிக்கு புக்கிங் செய்தார்.
காரை கோவில்பட்டி கொண்டு வருவதற்குக் கட்டணமாக அவர்கள் 19 ஆயிரம் ரூபாய் கேட்ட நிலையில், முன்பணமாக 10 ஆயிரம் ரூபாயை கொடுத்துவிட்டு, கோவில்பட்டி வந்துள்ளார். 10 நாட்கள் கடந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அவரை தொடர்புகொண்ட ஒரு நபர், கார் கோவில்பட்டி வந்துவிட்டதாகவும் மீதி தொகை 9 ஆயிரம் ரூபாயை ஆன்லைனில் செலுத்திவிட்டு, காரை மதுரை பாத்திமா கல்லூரி அருகே வந்து பெற்றுக்கொள்ளுமாறும் கூறியுள்ளான். அதனை நம்பி 9 ஆயிரம் ரூபாயை ஆன்லைனில் செலுத்திய சச்சின்குமார் மங்கள், மர்ம நபர் சொன்ன இடத்துக்குச் சென்று பார்த்தபோது அங்கு கார் இல்லை.
சம்மந்தப்பட்ட நபரைத் தொடர்பு கொள்ள முயன்றபோது, அந்த எண் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்த நிலையில், 2 மணி நேரம் கழித்து சச்சினை போனில் அழைத்து, மேலும் 12 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் மட்டுமே கார் கிடைக்கும் எனக் கூறியுள்ளது. அதிர்ச்சியடைந்த சச்சின்குமார் மங்கள், நீங்கள் காரை ஒப்படையுங்கள், கையில் பணத்தைக் கொடுத்துவிடுகிறேன் எனக் கூறியுள்ளார். ஆனால் ஆன்லைன் மூலம் மட்டுமே பணம் செலுத்த வேண்டும் என்றும் பணம் செலுத்தினால் மட்டுமே கார் கிடைக்கும் என்றும் மோசடிப் பேர்வழிகள் கூறியுள்ளனர்.
அந்த 12 ஆயிரம் ரூபாய் பணத்தை செலுத்திய பிறகும் காரை ஒப்படைப்பார்களா என்ற சந்தேகம் சச்சின் குமார் மங்களுக்கு எழவே, காரின் போட்டோக்களை அனுப்புமாறு கூறியுள்ளார். அவர்களும் போட்டோக்களை அனுப்பிய நிலையில், அவை பெங்களூருவில் எடுக்கப்பட்டது என்பது தெரியவந்தது. பெங்களூரு சென்று பார்த்தபோது, அங்கிருந்தும் கார் எடுத்துச் செல்லப்பட்டிருந்தது. இதனையடுத்து வேறு வழியின்றி சச்சின் குமார் மங்கள் மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார்.
புகாரைப் பெற்று காரை டிராக் செய்து கண்டுபிடிக்குமாறு செல்லூர் காவல் நிலைய போலீசாருக்கு மாநகரக் காவல் ஆணையர் உத்தரவிட்டார். இதனையடுத்து மோசடி கும்பல் அளித்த எண்ணில் பேசிய போலீசார், காரை உடனடியாகக் கொண்டு வந்து ஒப்படைத்துவிட்டு பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளனர். டெல்லியைச் சேர்ந்த இன்டியன் கார்கோ சர்வீஸ் நிறுவனத்துக்கும் அவர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். விவகாரம் போலீஸ் வரை சென்றதால் பயந்துபோன மோசடிப் பேர்வழிகள், காவல் நிலையத்தில் கொண்டு வந்து காரை ஒப்படைத்துவிடுகிறோம் என உறுதி அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கார் கோவில்பட்டி வந்து சேர்ந்ததா, மதுரை வந்து சேர்ந்ததா, டெல்லியிலேயே இருக்கிறதா, பெங்களூருவில் இருக்கிறதா எனத் தெரியாமல் சச்சின் குமார் மங்கள் 3 நாட்களாக மன உளைச்சலில் தவித்து வருகிறார். காரை மறைத்துவைத்துக் கொண்டு கண்ணாமூச்சி காட்டும் மோசடி கும்பல் பிடிபட்டால் மட்டுமே அவர்களின் உண்மையான பின்னணி தெரியவரும்,.