திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கோவிந்தபுரம் ஏரியின் உபரி நீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏரியிலிருந்து வெளியேறும் நீர் கால்வாயில் செல்லாமல் சுப்பிரமணி கோயில் தெரு, துரைசாமி தெரு, திருவள்ளுவர் நகர் உள்ளிட்ட பகுதிகளை சூழ்ந்துள்ளதால் அப்பகுதியில் வாழும் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆத்திரம் அடைந்த மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு மக்கள் கலைந்து சென்றனர். இதனால், அங்கு சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.