தொடர்மழை காரணமாக, கடலூர் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. சுமார் 46 ஆண்டுகளுக்கு பிறகு, தென்பெண்ணை ஆறு ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் சுமார் 1000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கி தவித்தவர்களை, மீட்பு படையினர் இரப்பர் படகு மூலம் மீட்டனர்.
முதல் தளம் வரை தண்ணீர் தேங்கி நிற்பதால், அனைத்து பொருட்களும் சேதம் அடைந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இருபுறமும் கயிறு கட்டி கிராம மக்கள் பாதுகாப்பாக மீட்பு
தொடர்மழை காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பாதூர் பெரிய ஏரி நிரம்பி, அதிகளவில் உபரி நீர் வெளியேறி ஊருக்குள் புகுந்ததால், வெள்ள நீரில் சிக்கிய பொதுமக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
கனமழை காரணமாக, உளுந்தூர்பேட்டையில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி, நீரோடை வழியாக பாதூர் பெரிய ஏரி வந்தடைந்தது. இதனால் முழுமையாக நிரம்பிய, ஆயிரத்து 450 ஏக்கர் பரப்பளவிலான பாதூர் பெரிய ஏரி நிரம்பி, உபரி நீர் கால்வாய் வழியாக கிராமத்துக்குள் புகுந்தது.
சுமார் 4 அடி உயரத்திற்கும் மேல் தண்ணீர் செல்லும் நிலையில், தனித்தீவாக காட்சியளிக்கும் 500 குடும்பங்களை சேர்ந்த மக்கள், இருபுறமும் கயிறு கட்டி, பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
ஆற்றின் கரையோரமுள்ள 250 வீடுகளில் வெள்ளம் புகுந்தது
செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரத்தில் பாலாற்றில் கரைபுரண்டு பாயும் வெள்ளம் கரையோரத்தில் உள்ள 250க்கு மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்துள்ளது.
செய்யாறு, கவுண்டின்யா ஆறு, பொன்னையாறு ஆகிய துணையாறுகளில் பாயும் வெள்ளமும் சேர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் பாலாற்றில் ஒரு இலட்சம் கன அடிக்கு மேல் வெள்ளம் பாய்கிறது. இதனால் திம்மாவரத்தில் ஆற்றின் கரையோரம் உள்ள 250க்கு மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்தபோதே இந்த வீடுகளில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டுப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.