தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் 44 கோடியே 30 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட காவல்துறை, சிறைத்துறைக் கட்டடங்களைச் சென்னைத் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 270 காவலர் குடியிருப்புகள், 2 காவல் நிலையங்கள், 2 காவல் துறைக் கட்டடங்கள், 6 உதவி சிறை அலுவலர் குடியிருப்புகள் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் 3 கோடியே 57 இலட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஓட்டுநர் தேர்வுத் தளத்துடன் கூடிய கட்டடத்தையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.
தடய அறிவியல்துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள "தடய மரபணுத் தேடல் மென்பொருள்" செயலியைப் பன்பாட்டுக்குக் கொண்டு வந்தார்.
கடத்தப்பட்ட அல்லது காணாமல் போன குழந்தைகளை மரபணு ஒப்பீட்டு ஆய்வு மூலம் பெற்றோரிடம் ஒப்படைத்தல், மாநிலங்களிடையே செயல்படும் குற்றவாளிகளின் தொடர்பைக் கண்டறிதல், அடையாளம் காண இயலாத உடல்கள் மற்றும் மனித எலும்புகளை மரபணு ஆய்வு மூலம் அடையாளம் காணுதல், தொடர் குற்றங்களில் ஈடுபடுவோரைக் கண்டறிதல் ஆகிய பணிகளை இதன்மூலம் விரைவாகவும் எளிதாகவும் மேற்கொள்ள முடியும்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் "தமிழ்நாடு மாநிலக் குழந்தைகளுக்கான கொள்கையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். நிதி ஆதரவுத் திட்டத்தின் கீழ் 1148 குழந்தைகளுக்கு நிதி உதவியும், 15 பேருக்குக் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும் முதலமைச்சர் வழங்கினார்.