பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து 23 ஆயிரத்து 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கொசஸ்தலை ஆற்றில் அதிகளவில் நீர் வெளியேற்றப்படுவதால், சென்னை மணலிபுதுநகர் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
பூண்டி நீர்த்தேக்கத்திற்கு கடந்த 2 நாட்களாக நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் உபரிநீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்துவிடப்பட்டது. இதன் காரணமாக மணலி, மணலி புதுநகர், சடையன் குப்பம், மகாலட்சுமி நகர், இருளர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. இதையடுத்து, அங்கிருந்த 300க்கும் அதிகமான குடும்பத்தினர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, பூண்டி சத்தியமூர்த்தி நீர்க்தேக்கத்திற்கு 24 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியில் இருந்து தற்போது 23 ஆயிரத்து 500 கனஅடி வீதம் நீர் வெளியேற்றப்படுகிறது.
இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
நேற்று இரவு நிலவரப்படி 40 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது நீர்வரத்து குறைந்திருப்பதால் நீர்திறப்பும் குறைக்கப்பட்டு வருகிறது.
கொசஸ்தலை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீரை நரப்பாளையம் பாலத்தில் இருந்தவாறு பொது மக்கள் செல்பி மற்றும் வீடியோ எடுத்து வருகின்றனர்.