கோவையில் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் தையல் ஊசியை தொண்டையில் குத்திக் கொண்ட இளம்பெண்ணின் கழுத்தில் இருந்து அந்த ஊசியை அறுவைச் சிகிச்சை செய்து அரசு மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.
19வயதான அந்த இளம்பெண், குடும்ப பிரச்சனையால் தற்கொலைக்கு முயற்சித்து கழுத்தில் காயத்துடன், கடந்த 2-ந் தேதி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார். வெளிப்புற காயங்கள் சிகிச்சை மூலம் சரி செய்யப்பட்ட போதிலும், தொடர்ந்து வலி இருந்ததால், சி.டி.ஸ்கேன் எடுக்கப்பட்ட போது, ஏழரை செண்டி மீட்டர் அளவுக்கு நீளமான தையல் ஊசி கழுத்தில் மூச்சுக்குழாயில் இருந்துள்ளது.
முன்புற கழுத்தில் குத்திய ஊசியானது ட்ரக்கியா, தண்டுவடம் வழியாக பின்புறம் வரை சென்றிருந்ததோடு, மூளைக்குச் செல்லும் ரத்த நாளத்தின் அருகே இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், அவற்றை அறுவை சிகிச்சை செய்து எடுக்க முடிவு செய்தனர்.
சி.ஆர்ம் எஸ்ஸ்ரே கருவியின் மூலம் ஊசி இருக்குமிடம் துல்லியமாக கண்டறியப்பட்டு, அறுவை சிகிச்சை செய்து ஊசி அகற்றப்பட்டுவிட்டது. ரத்த நாளத்திற்கு அருகே ஊசி இருந்ததால் அறுவை சிகிச்சை மிகவும் சவலாக இருந்ததாகவும், இருப்பினும் மற்ற உறுப்புகளை பாதிக்காத வகையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை செய்துமுடித்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.