வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பொன்னை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மினி சரக்கு வாகனத்தில் சிக்கியவர்களை பொதுமக்களே பத்திரமாக கயிறு கட்டி மீட்டனர்.
சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசனும், மோகனும் ஆந்திர மாநிலம் பலமனேர் பகுதிக்கு தக்காளி லோடு ஏற்றுவதற்காக மினி சரக்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
இருவரும் கீரைச்சாத்து கிராமத்தில் சென்று கொண்டிருந்த போது, திடீரென ஆற்றில் வெள்ளம் அதிகரித்து சாலையில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் சரக்கு வாகனம் அடித்துச் செல்லப்பட்டது. இதனையடுத்து, அப்பகுதி மக்களே ஒன்று சேர்ந்து கயிறு கட்டி இருவரையும் மீட்டனர்.
பொன்னை ஆற்றை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த வாத்து பண்ணையில் வெள்ளம் புகுந்து, இரண்டாயிரம் வாத்து குஞ்சுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனிடையே, வேலூர் கோட்டைக்கு உள்ளே உள்ள ஜலகண்டேஸ்வரர் ஆலயம் முழுவதும் முழங்கால் அளவிற்கு மழை நீர் தேங்கியுள்ளது.