வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு பகுதியில் தொடர் மழையால் வீடு இடிந்து விழுந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உட்பட 9 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பேர்ணாம்பட்டு நகர் பகுதியில் அஜ்ஜியா தெருவைச் சேர்ந்தவர் 63வயதான மூதாட்டி அனீஷா பேகம். இவரது இரண்டு மாடி கொண்ட கான்கிரீட் வீட்டில் தரைத்தளத்தில் அனீஷா பேகம், அவரது இரண்டு மகன்கள் என கூட்டுக் குடும்பமாக வசித்து வந்துள்ளனர்.
மேல் தளத்திலிருந்த இரண்டு வீடுகளில் வெவ்வேறு இரண்டு குடும்பத்தினரும் வாடகைக்கு இருந்துள்ளனர். இந்த நிலையில், அனீஷா பேகத்தின் வீடு சுமார் 20 ஆண்டு கால பழமையானதாக கூறப்படும் நிலையில், தொடர் மழையால் உறுதித்தன்மையை இழந்திருந்துள்ளது.
இன்று காலை மேலே இருந்த ஒடு வீட்டின் கான்கிரீட் தளம் முழுமையாக சரிந்து விழுந்து வீடு தரைமட்டமானதாக சொல்லப்படுகிறது. பயங்கர சத்தத்துடன் வீடு இடிந்து விழுந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு மற்றும் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
வீட்டின் இடிபாடுகளில் சிக்கிய அனீஷா பேகம் அவரது மருமகள்கள் ரூகிநாஸ், மிஸ்பா பாத்திமா, மேலும் பேரன்கள் மன்னுல்லா, தாமீத், பேத்திகள் அபிரா, அப்ரா என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாக கூறப்படுகிறது.
மேல் வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்த தாய் கௌசர், மகள் தன்சிலா ஆகியோரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வீடு இடிந்து விழுந்து 4 சிறுவர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்திருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மொத்தமாக கட்டிடத்தில் 18 பேர் இருந்ததாக கூறப்படும் நிலையில், 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மீதமுள்ள 9 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு, பேர்ணாம்பட்டு, குடியாத்தம், வேலூர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இடிபாடுகளை அகற்றும் பணிகளும் ஜே.சி.பி. உதவியுடன் நடைபெற்று வருகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்து ஆறுதல் கூறிய மாவட்ட ஆட்சியர், சம்பவ இடத்திலும் ஆய்வு செய்தார்.
இந்த நிலையில், வீடு இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 5லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோருக்கு தலா 50ஆயிரம் ரூபாய் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.