வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை முழுமையாக கரையை கடந்தது. இதனால் ரெட் அலெர்ட் வாபஸ் பெறப்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 1.30 மணி அளவில் புதுச்சேரிக்கும் சென்னைக்கும் இடையே காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையைக் கடக்க தொடங்கியது. இந் நிலையில் 4 மணி நிலவரப்படி முழுமையாக கரையை கடந்தது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார்.
குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 3 முதல் 4 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் சென்னைக்கும் இடையே கரையை கடந்தது தற்போது வட தமிழக கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ளது தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழக்க கூடும் என்று அவர் தெரிவித்தார்.
அடுத்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி தருமபுரி திருப்பத்தூர் வேலூர் சேலம் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது . மற்ற மாவட்டங்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும். இதுவரை வழங்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கைகள் அனைத்தும் முழுமையாக விலக்கிக் கொள்ளப்படுகிறது என்று பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.