சிறுவர்களின் ஆபாச வீடியோக்களைப் பகிர்ந்த விவகாரத்தில், தமிழ்நாடு உள்ளிட்ட 14 மாநிலங்களில் 77 இடங்களில் ஒரே நேரத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 100க்கும் மேற்பட்டோர் இதில் சிக்கியுள்ளதால் சி.பி.ஐ. விசாரணை தீவிரமடைந்துள்ளது.
சிறுவர் சிறுமிகளை ஆபாசப் படம் எடுத்து இணையவெளிகளில் பரப்பும் கும்பல் குறித்த இன்டர்போல் தகவலையடுத்து குழந்தைகள் தினமான நவம்பர் 14 ஆம் தேதி முதல் 400க்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
பாகிஸ்தான், இலங்கை, கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து , சவூதி அரேபியா , எகிப்து, போன்ற நாடுகளில் இயங்கும் 50 குழுக்கள் மூலமாக சமூக ஊடகங்களிலும் மொபைல்களிலும் சிறுவர் ஆபாச வீடியோக்கள் உலகம் முழுவதும் பகிரப்படுவதாக தகவல் வெளியானது.
இதையடுத்து, நாடு முழுவதும் 14 மாநிலங்களில் 77 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்த, பரப்பியவர்களை சிறைப்பிடித்தனர். 100க்கும் மேற்பட்டோர் சிக்கிய போதும் 10 பேரை இதுவரை கைது செய்துள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் ஆன்லைனில் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் வீடியோக்களை வியாபாரம் செய்வது தொடர்பாக 6பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் மருந்தாளர் வீட்டில் 10 மணிநேரமாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சமத்துவபுரத்தில் உள்ள வீட்டில் CBI அதிகாரிகள் 12 மணி நேரமாக சோதனையில் ஈடுபட்டனர். இதனிடையே ஒடிசாவில் உள்ள ஒரு கிராமத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனையிடச் சென்ற போது கிராம மக்கள் சிபிஐ அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினர். தகவலறிந்து சென்ற போலீசார் தலையிட்டு சிபிஐ அதிகாரிகளை பாதுகாப்பாக மீட்டு வந்தனர்.
டெல்லி, திருப்பதி, அஜ்மீர், ஜெய்ப்பூர் உள்பட பல்வேறு முக்கிய நகரங்களிலும் சோதனைகள் இன்றும் தொடர்ந்து நடைபெறுவதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஆபாச வீடியோக்களை பகிர்ந்த லேப்டாப்கள், மொபைல் போன்கள் , கணினிகள் பெருமளவில் பறிமுதல் செய்யப்பட்டு அவை ஆய்வுக்கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.