வன்னியர்களுக்கு 10 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய சட்டத்தை ரத்து செய்த உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க, கடந்த பிப்ரவரியில் சட்டம் இயற்றப்பட்டது.
இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகளை மதுரை கிளையிலிருந்து விசாரித்த நீதிபதிகள், நவம்பர் 1ஆம் தேதி சட்டத்தை ரத்து செய்வதாக தீர்ப்பளித்தனர்.
இந்நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த தமிழக அரசு, இட ஒதுக்கீடு அளிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது என்றும் உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, இட ஒதுக்கீட்டை அமல்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்துள்ளது.